ஒரு காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்து, பின்னர் ஓவர் ரேட்டட் ஆன பொறியியல் படிப்புகள் தற்போது மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
2000கள் தொடங்கி பொறியியல் படிப்புகள் மாணவர்களிடையே பெரும் கனவாக இருந்து வந்தது. தமிழகம் முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் வீட்டிற்கு ஒரு எஞ்சினியர் என்ற அளவிற்கு பல மாணவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பொறியியல் படித்தனர். ஆனால் அவ்வளவு பேருக்கும் போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழத் தொடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளில் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருந்தது.
ஆனால் கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அறிவியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் முதல் தேர்வாக மருத்துவம், பொறியியல் துறை சார்ந்த படிப்புகளே உள்ளன.
முன்பு சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் பிரிவுகளில் மாணவர்களுக்கு இருந்து வந்த ஆர்வம் தற்போது ரசாயனம், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பியல் என மாறியுள்ளது. இந்த துறைகளில் உள்ள எதிர்கால அப்டேட்டுகளை கருத்தில் கொண்டு மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு பல கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதலாக பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில் இதுவரை 2,26,503 மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படிக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K