திருச்சியில் சாக்கு மூட்டையில் பணத்துடன் சாலை அருகே நின்ற அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் ஆவணங்களின்றி எடுத்து செல்லும் பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் – திருச்சி பிரதான சாலையில் பெட்டவாய்த்தலை பாலம் அருகே சாக்கு மூட்டையோடு கார் ஒன்று நின்றிருப்பதை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் சாக்கு மூட்டையை சோதித்ததில் அதில் முழுக்க பணம் இருந்துள்ளது. அருகே இருந்த கார் அதிமுக எம்.எல்.ஏ செல்வராஜூக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
அதில் அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் இருந்த நிலையில் அந்த சாக்கு மூட்டை தங்களுடையது இல்லை, வேறு இரு வாகனத்தில் இருந்தவர்கள் சண்டை போட்டு கொண்டிருந்ததால் வண்டியை நிறுத்தி பார்த்தபோது சாக்கு மூட்டை கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரையும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.