Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை குடியேறிகள்: பைடன் நிர்வாகத்தில் தடுப்பு முகாம்களின் முதல் படங்கள் - புதிய சர்ச்சை

குழந்தை குடியேறிகள்: பைடன் நிர்வாகத்தில் தடுப்பு முகாம்களின் முதல் படங்கள் - புதிய சர்ச்சை
, செவ்வாய், 23 மார்ச் 2021 (23:35 IST)
டெக்ஸாஸில் இருக்கும் ஒரு தடுப்புக் காவல் மையத்தில் குழந்தைகள் நெருக்கமாக ஒரே அறையில் இருந்த காட்சிகள் வெளியான பின், புதிய தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்படும் என அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லை பகுதியில், டெக்ஸாஸ் மாகாணத்தின் டொன்னா பகுதியில் அரசு நடத்தும் தடுப்புக் காவல் மையத்தில் சுமார் 1,000 பேர் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், அந்த மையங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டும் முதல் படங்கள் இவை.
 
டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது, அமெரிக்காவில் குடியேற விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை நீக்கினார் புதிய அதிபர் ஜோ பைடன்.
 
பாதுகாவலர்கள் யாரும் இல்லாத குழந்தைகளை, ஸ்பான்சர் செய்யும் அமெரிக்க குடும்பங்களுடன் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவர்களைத் திருப்பி அனுப்பும் கொள்கையை திரும்பப்பெற்றது பைடன் நிர்வாகம்.
 
ஆனால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பைடன் தான் காரணம் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு மேலும் வருவோர் வசிக்க இடம் வழங்க ஏற்பாடுகள் செய்து வருவதாக நேற்று (22.03.2021 திங்கட்கிழமை) அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறினார்.
 
"அந்த இடத்தில், குழந்தைகள் சுகாதார வசதிகளைப் பெறலாம், கல்விச் சேவையைப் பெறலாம், அவ்வளவு ஏன், சட்ட ரீதியிலான சேவைகளைக் கூடப் பெறலாம்" என ஜென் சாகி கூறினார்.
 
நேற்று தடுப்புக் காவல் மையங்களின் படங்களை அமெரிக்க ஜனநாயக கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஹென்றி கல்லர் வெளியிட்ட பிறகு, ஊடகச் செயலாலர் இப்படி கூறினார்.
 
ஹென்றி கல்லர் வெளியிட்ட படங்களில் டொன்னா தடுப்புக் காவல் மையத்தில் சிறார்கள், மெலிதான மெத்தை மீது, பிளாஸ்டிக் ஷீட்டுகளை போர்த்திக் கொண்டு உறங்குவதை காண முடிந்தது.
 
நெரிசல் முகாமில் பிளாஸ்டிக் ஷீட் தடுப்புகளுக்கு இடையே உறங்கும் குடியேறிகள்
 
கொரோனா பரவும் காலத்திலும் தடுப்பு மையத்தில் சமூக இடைவெளி இல்லை என்கிற பிரச்னையை எழுப்பி இருக்கிறது அந்த படங்கள்.
 
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இரண்டு மீட்டர் இடைவெளி உடன் இருக்க வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் அந்த மையங்கள் அப்படி இல்லை.
 
அந்த மையங்களில் அடிப்படைத் தேவைகளான சோப்பு, உணவு போன்றவைகள் கூட முறையாகக் கொடுக்கப்படவில்லை என செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
 
"இந்த எல்லை ரோந்து மையங்கள், குழந்தைகளுக்கானது அல்ல என நாங்கள் நீண்ட நாட்களாகக் கூறி வருவதை இப்படங்கள் காட்டுகின்றன " என கூறினார் ஜென் சாகி. "குழந்தைகள் நீண்ட காலத்துக்கு இருப்பதற்கு அவை சிறந்த இடமல்ல" என்றார் சாகி.
 
மெக்ஸிகோ எல்லை தற்காலிக முகாம்களில் பிளாஸ்டி ஷீட் மூலம் தடுப்பு போட்டு வசிக்கும் குடியேறிகள்
 
ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்றது முதல் இதுவரை, பத்திரிகையாளர்கள் அந்த மையத்தை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வெள்ளை மாளிகை, அந்த மையத்தில் ஊடகவியலாளர்களை அனுமதிப்போம் என கூறியுள்ளது.
 
அந்த மையத்தில் இருக்கும் சிறார்களுக்காக குரல் கொடுக்கும் வழக்குரைஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என வெகு சிலர் மட்டுமே அந்த மையத்தைப் பார்வையிட்டு இருக்கிறார்கள். அப்படிச் சென்றுப் பார்த்தவர்கள் அனைவரும் அங்கு நிலைமை அத்தனை சரியில்லை என்றே கூறுகிறார்கள்.
 
கடந்த சில மாதங்களில், பாதுகாவலர்கள் யாருமின்றி எல்லையில் தனியாக இருக்கும் மைனர் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருக்கிறது.
 
மெக்ஸிகோ, கெளதிமாலா போன்ற நாடுகளுடன் இணைந்து இந்தப் பிரச்சனையின் தொடக்கப் புள்ளியைத் தீர்க்க வேலை செய்ய விரும்புவதாக கூறியுள்ளது அமெரிக்கா. இதில் மத்திய அமெரிக்காவில் பரவலாக காணப்படும் ஏழ்மை மற்றும் வன்முறை போன்ற பிரச்னைகளும் அடக்கம்.
 
பெற்றோரின்றி வாழும் சிறார்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்துள்ளது
 
"வன்முறையில் இருந்து தப்பித்து அமெரிக்க எல்லைப் பகுதிக்குள் ஓடி வரும் குழந்தைகள், இனப்படுகொலைகளிலிருந்து ஓடி வரும் குழந்தைகள், மோசமான சூழலில் இருந்து ஓடிவரும் குழந்தைகள்... ஒரு நெருக்கடி அல்ல" எனக் கூறினார் ஜென் சாகி.
 
"இந்த சூழலை சரியாகக் கையாண்டு, அவர்களை நல்ல விதமாக நடத்தி பாதுகாப்பான சூழலில் வைக்க வேண்டியது நம் கடமை என நாங்கள் கருதுகிறோம்" என்றார் சாகி.
 
“வாழ்விற்கான பெரும் போராட்டம்!” - மத்திய அமெரிக்காவில் நடப்பது என்ன?
கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? - அதிர்ச்சி தரும் தகவல்கள்
ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, அமெரிக்க தெற்கு எல்லைப் பகுதியில் ஆதரவின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
 
பெற்றோர்களை இழந்த குடியேறி வந்த குழந்தைகளை மீண்டும் அவரது பெற்றோர்களிடம் கொண்டு சேர்ப்பது, டிரம்பின் எல்லைச் சுவர் கட்டுமானத்தை நிறுத்துவது, சட்ட ரீதியிலான குடியேற்றத் திட்டங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியது என கடந்த ஜனவரி முதல் ஜோ பைடன் பல உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார்.
 
குடியேற்றத் தடுப்பு மையங்களின் நிலை குறித்து, டிரம்பின் ஆட்சிக் காலத்திலேயே அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
 
மெக்ஸிகோ - அமெரிக்கா எல்லையில் உள்ள அரசு நடத்தும் முகாமில் சுமார் 1000 பேர் வரை உள்ளனர்
 
டிரம்ப் காலத்தில் இருந்த தடுப்பு மையங்கள் தற்போது மறுசீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பிரச்னை இருக்கின்ற போதும், இம்மையங்கள் 100% அளவில் இயங்கலாம் என அமெரிக்காவின் சிடிசி அமைப்பின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த தாடியா ? அந்த தாடியா? பாஜகவை எதிர்க்கிறேன் - கமல்ஹாசன்