அதிமுக - பாஜக இடையேயான தேர்தல் கூட்டணி சமீபத்தில் உறுதியான நிலையில் அது தேர்தல் கூட்டணியா அல்லது ஆட்சியிலும் கூட்டணியா என்பது குறித்து இரு கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியாக தேர்தலை சந்தித்திருந்த நிலையில், பின்னாளில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டணியிலிருந்து விலகியிருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தது.
சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில் அன்றே கூட்டணியும் அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என பேசியிருந்தார். ஆனால் அதை அதிமுகவினர் மறுத்து வருகின்றனர்,
நேற்று அதுபற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றும், தேர்தலில் கூட்டணி அமைப்பதாக மட்டுமே பேசியிருப்பதாகவும் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரையும் அதே கருத்தையே முன் வைத்துள்ளார். ”தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. NDA கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும்” என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது “தேர்தல் கூட்டணியா? ஆட்சி கூட்டணியா? என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவும், எங்கள் கூட்டணியில் உள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்வார்கள். யூகங்களை பரப்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K