ஜல்லிக்கட்டு குறித்த பாடத்தை பாடப்புத்தகத்தில் சேர்க்க இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் விழா சமயத்தில் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டிற்கு மத்திய அரசு தடை விதித்தபோது தமிழக அளவில் மிகப்பெரும் போராட்டங்கள் ஏற்பட்டது. பிறகு ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக கொண்டாடப்பட்டன. ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ”தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டை தமிழக பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தப்படும். ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக குறுந்தகடுகள் வழங்கப்படும்” என கூறியுள்ளார்.