தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களுக்கு முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தர வேண்டிய நிலுவைத் தொகையை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நாட்டின் கல்வித்துறையில் ஒன்றிய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இதுவாகும் என்றும் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய முந்தைய ஆண்டிற்கான நிலுவைத்தொகை ரூ.249 கோடியும், தற்போது நிலுவையில் உள்ள நிதியையும் தாமதமின்றி விரைந்து விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.