காலாண்டு துறை விடுமுறை நீடிப்பு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வு விடுமுறை ஒன்பது நாட்கள் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டு வெறும் ஐந்து நாட்களே காலாண்டு துறை விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் ஞாயிறு மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால், மூன்று நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக இருப்பதாகக் கூறப்பட்டது, இதனால் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காலாண்டு தேர்வு விடுமுறையை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சற்று முன்னர் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை மற்றும் விடைத்தாள் திருத்தத்திற்கு கூடுதல் அவகாசம் தேவை என்பதற்கான சூழல் காரணமாக இந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.