அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்த நிலையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.
அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வந்த நிலையில் கட்சி முடிவுகள் எடுப்பத்தில் இருவருக்கும் இருவேறு கருத்துகள் நிலவியதால் மோதல் போக்கு நிலவியது. இதனால் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த, அதை ஓபிஎஸ் மறுத்து வந்தார். இதனால் இருவருடைய ஆதரவாளர்களும் அணி பிரியவே கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்தார். அதில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டும் நீக்கி பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து ஓபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால் இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். இதையடுத்து அதிமுகவை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார்.
சமீபத்தில் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லும் வகையிலும், அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மார்ச் 5,6,7 ஆகிய தேதிகளிலும், மார்ச் 10,11,12 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டங்கள் அதிமுக வலிமையை மீண்டும் நிரூபிக்கும் விதமாக அமையும் என பேசிக் கொள்ளப்படுகிறது.