தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் சோதனை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் கூட கர்நாடக அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அம்மாநில முதல்வர் குமாரசாமி கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை அடுத்து தற்போது தமிழகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு தொடங்கிவிட்டது. அதன்படி காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்ய வந்த அதிகாரிகள் வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் முரண்பட்டுப் பேசியதால் அவர்களிடம் தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
வரும் பாராளுமன்ற தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று துரைமுருகன் இல்லத்திற்கு வந்த மூன்று அதிகாரிகள் துரைமுருகன் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து துரைமுருகன் தனது வழக்கறிஞர்களை அழைத்தார். வழக்கறிஞர்கள் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டபோது அதில், ‘அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பார்வையாளர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்., இதற்குள் இந்த விஷயம் பரவி திமுக தொண்டர்கள் துரைமுருகன் வீட்டின் குவிந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே துரைமுருகன் வீட்டிலும், அவரது கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, சிபிஎஸ்இ பள்ளி,கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஸ்தியான் பேட்டையில் உள்ள கல்லூரி பள்ளியில் தேர்தல் பறக்கும் படையும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வாணியம்பாடியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும், சோதனை நடைபெற்றது.
தற்போது கூடுதலாக மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.இரவில் இருந்து நீடிக்கும் சோதனையால் திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.