Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் மூலம் மது விற்பனை.. ஆபத்தான முயற்சியை கைவிடுங்கள்: டாக்டர் ராமதாஸ்

Advertiesment
ramadoss

Mahendran

, புதன், 17 ஜூலை 2024 (10:23 IST)
ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா? ஆபத்தான முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில்  பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு  திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும்  தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா?  வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். 
 
வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும்.  ஆனால், தமிழக அரசு  அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில்  மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு.  அதனால்  தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.
 
மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது - புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான்  மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே  மதுவை நேரடியாக  கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
 
போதை குறைந்த  மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில்  வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும்  மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.
 
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி  அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை  ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.  மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரம்ப்பை சுட்ட துப்பாக்கி மாடல்.. அமெரிக்கா முழுவதும் தடை செய்யும் ஜோ பைடன்!