Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு: முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி! டாக்டர் ராமதாஸ்

Mahendran
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:56 IST)
17 நாள்கள், 18  நிறுவனங்களுடன் ஒப்பந்தம்,  வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு, 
முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிக குறைவு ஆகும்.
 
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை  ஏற்கனவே தமிழ்நாட்டில்  செயல்பட்டு வருபவை தான். அந்த நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான  மையங்களை அமைப்பதற்காகவே முதலீடு செய்ய  முன்வந்திருக்கின்றன. உலகில் நான்காம் தலைமுறை தொழில்புரட்சி  நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய ஆய்வு மையங்கள் அமைக்கப்படுவதும், அதற்காக முதலீடு  செய்யப்படுவதும் இயல்பாக நடக்கக் கூடியவை. ஒருவேளை இதற்கான முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட  நிறுவனங்களுடன் தகவல்தொழில்நுட்ப அமைச்சரும், செயலாளரும் பேச்சு நடத்தி சாதித்திருக்கலாம். இதற்காக முதலமைச்சர் அவர்கள் தம்மை வருத்திக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை.
 
தெலுங்கானா முதலமைச்சராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி கடந்த  ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு,  ரூ.31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். மொத்தம் 19 நிறுவனங்களுடன் தெலுங்கானா அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் அம்மாநிலத்திற்கு கிடைக்க இருப்பவை  தரமான முதலீடுகள் ஆகும்.
 
அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான அரசின் சார்பில்  அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர். 
 
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54-ஆம் மாநாட்டின் போது மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே தலைமையிலான குழு  மொத்தம் ரூ.3.53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில்  கையெழுத்திட்டுள்ளது. அவற்றின் பெரும்பாலானவை  அமெரிக்க முதலீடுகள் ஆகும்.  இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது.
 
தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.  அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும்,  தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் விடுமுறை எதிரொலி.! தனியார் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு.! அதிர்ச்சியில் பயணிகள்.!!

அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் விவகாரம்.! பாஜகவினரின் செயலுக்காக அண்ணாமலை மன்னிப்பு.!!

அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிப்பு.! ராகுல் காந்தி கண்டனம்.!!

தனது சொந்த ஊரில் இன்று முதல் படப்பிடிப்பை துவக்கிய இயக்குநர் பொன்ராம் - பட பிடிப்புக்காக வந்த சரத்குமார், சண்முக பாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு!

விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments