Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடிக்குக் கூட்டணியில் இருந்தே எதிர்ப்பு… ராமதாஸ் கண்டனம்!

Advertiesment
மோடிக்குக் கூட்டணியில் இருந்தே எதிர்ப்பு… ராமதாஸ் கண்டனம்!
, சனி, 19 செப்டம்பர் 2020 (11:34 IST)
ரயில்களில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தொகை வசூலிக்கப்படுவதை எடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸின் அறிக்கை:-

"நாட்டிலுள்ள முக்கியத் தொடர்வண்டி நிலையங்களை நவீனமயமாக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முடிவு செய்துள்ள தொடர்வண்டி வாரியம், அதற்காக பயணிகளிடம் கூடுதலாக பயனாளர் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் வி.கே.யாதவ் கூறியிருக்கிறார். இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதன்பின் பயனாளர் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் தொடர்வண்டி வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்வண்டி நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், அதன்மூலம் தொடர்வண்டிக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்படுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயனாளர் கட்டணம் என்பதே அடிப்படையில் தவறு ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விமான நிலையங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, பன்னாட்டு விமான நிலையங்களில் சில கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை திருப்பி எடுப்பதற்காக பயனாளர் கட்டணம் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டது. அதே அடிப்படையில் தான் இப்போது தொடர்வண்டி பயனாளர் கட்டணம் என்ற புதிய முறை திணிக்கப்படுகிறது. இந்தத் தத்துவமே பெருந்தவறு ஆகும்.

விமானங்களில் பயணம் செய்பவர்களையும், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. விமானங்களில் பயணம் செய்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு பயணத்தின் போதும் ரூ.200 முதல் ரூ.400 வரை பயனாளர் கட்டணம் செலுத்துவது பெரிய சுமை அல்ல. ஆனால், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பேருந்து கட்டணத்தை விட கட்டணம் குறைவு என்பதற்காக தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் தான் அதிகம். தொடர்வண்டிகளில் பயனாளர் கட்டணமாக ஒரு பயணியிடம் ரூ.30 முதல் ரூ.50 வரை வசூலிக்கப் பட்டால் கூட, அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்; அதை அவர்களால் செலுத்த முடியாது.
webdunia

 
மற்றொருபுறம் தொடர்வண்டி நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டியது தொடர்வண்டி வாரியத்தின் கடமையாகும். இந்தியாவில் தொடர்வண்டித்துறை தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தொடர்வண்டி நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இப்போது புதிதாக பயனாளர் கட்டணம் வசூலிப்பது என்பது தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தருவதற்காக தொடர்வண்டிப் பயணிகளை சுரண்டுவதாகவே அமையும். பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த செயலை அனுமதிக்கவே முடியாது.

தொடர்வண்டி நிலையங்களில் சர்வதேசத் தரத்துக்கு இணையான நவீன வசதிகளை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது தான். அத்தகைய வசதிகளை தனியார் நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தால், அந்த முதலீட்டை திருப்பி எடுப்பதற்காக தொடர்வண்டி நிலையத்தில் உள்ள இடங்களை வணிகரீதியாக பயன்படுத்திக் கொள்ள அந்த நிறுவனங்களை அனுமதிப்பது தான் இயல்பாகும். பல நாடுகளில் இத்தகைய முறை தான் நடைமுறையில் உள்ளது. அதை விடுத்து தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக பயணிகளிடம் பயனாளர் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

இதில் இன்னொரு அநீதியும் உள்ளது. பயனாளர் கட்டணம் என்பதை தொடர்வண்டி நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு வசூலிப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நாட்டில் உள்ள7000 தொடர்வண்டி நிலையங்களில் 10 முதல் 15%, அதாவது 700 முதல் 1050 தொடர்வண்டி நிலையங்கள் நவீனப்படுத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்குள் அவை நவீனமயமாக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாதாம். ஆனால், எந்த வசதியும் ஏற்படுத்தப்படாத நிலையிலேயே, அடுத்த சில வாரங்களில் இருந்தே, அந்த தொடர்வண்டி நிலையங்களில், இல்லாத சேவைகளுக்கு, பயனாளர் கட்டணம் வசூலிக்கப்படுமாம். இது நியாயமா? அதுமட்டுமின்றி, நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட வாய்ப்பில்லாத தொடர்வண்டி நிலையங்களிலும் குறைந்த அளவில் பயனாளர் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தொடர்வண்டி வாரியம் தெரிவித்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.

தொடர்வண்டி சேவை என்பது ஏழைகளுக்கானது ஆகும். அந்த சேவையில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால், தொடர்வண்டி சேவை என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும். எனவே, தொடர்வண்டி நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும் தொகையை திருப்பி எடுப்பதற்கு மாற்று வழிகளை ஆராய வேண்டும். பயனாளர் கட்டண முறையை கைவிட வேண்டும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குதிர வண்டியா கேக்குது... பாஜக மாநில தலைவர் முருகன் மீது வழக்கு!