Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ரஸ்மீட்களை ரத்து செய்யவேண்டும்! அரசியல்தலைவர் கருத்து!

ப்ரஸ்மீட்களை ரத்து செய்யவேண்டும்!  அரசியல்தலைவர் கருத்து!
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (14:51 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பால் பத்திரிக்கையாளர்கள் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ப்ரஸ் மீட்களை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்க தொடங்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் பத்திரிகையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பதால் ஏற்கனவே இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனால் சென்னையில் 29 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என பாம நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும் பல பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கும் கொரோனா வைரஸ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக பத்திரிகையாளர்கள் தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களைப் பொறுத்த வரை பணி முறைகளை சற்று மாற்றியமைப்பதன் மூலம் அவர்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும். கொரோனா பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. களத்திற்கு நேரடியாக சென்று செய்தி சேகரிக்க வேண்டிய குற்றங்கள், விபத்துகள் போன்றவையும் இப்போது நடப்பதில்லை. மாறாக, கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சில நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்புகளையும், சில நேரங்களில் சிலர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யும் உதவி வழங்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்து செய்தியாக்குவது தான் அவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவை குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பத்திரிகையாளர்கள் களத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது; அதன் மூலம் கொரோனா ஆபத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அதிகாரிகளில் தொடங்கி அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் தகவல்களை செய்திக்குறிப்புகளாக ஊடகங்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை இதுகுறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் காட்சிகளாகத் தான் வர வேண்டும் என்று அரசு விரும்பினால், திரைப்படப் பிரிவு அல்லது செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். பேரவை அலுவல்கள் அவ்வாறு தான் படம் பிடித்து தரப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

மேலும், ஒரு செய்தியாளர் சந்திப்பை நேரலை செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியில் இருந்தும் செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு உதவியாளர், நேரலை வாகன பொறுப்பாளர், நேரலை தொழில்நுட்ப பணியாளர், அவரது உதவியாளர், வாகன ஓட்டுனர் என 7 பேர் செல்ல வேண்டும். குறைந்தது 20 தொலைக்காட்சிகள் செய்தியாளர் சந்திப்பில் செய்தி சேகரிக்க வந்தால் குறைந்தது 140 பேர் கூடுவர். அவர்களுடன் அச்சு ஊடக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோரையும் சேர்த்தால் செய்தியாளர் சந்திப்பில் குறைந்தது 250 பேராவது கூடுவார்கள். இதைத் தவிர்த்தாலே கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து பத்திரிகையாளர்களைக் காப்பாற்ற முடியும்.

எனவே, கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு கைவிட வேண்டும்; அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்றால் அவற்றின் படப்பதிவுகளை ஊடகங்களுக்கு அரசே வழங்க வேண்டும். தேவையற்ற பிற நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிப்பதை, பாதுகாப்பு கருதி ஊடகங்கள் தவிர்க்கலாம். அதேபோல், ஊடக அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, வைரஸ் தொற்றிலிருந்து நான்காவது தூண்களின் பிரதிநிதிகளைக் காப்பாற்ற அரசும், ஊடக நிறுவனங்களும் முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் இப்படி? வேதனையில் ஈபிஎஸ் & ஓபிஎஸ்!