Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது ஆளுநரின் வேலை அல்ல - சீறும் ராமதாஸ்

இது ஆளுநரின் வேலை அல்ல - சீறும் ராமதாஸ்
, வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (10:44 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுரிடம் மனு கொடுத்தனர். 


 

 
இதையடுத்து, சட்டமன்றத்தை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட பல கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கைவிரித்து விட்டார். 
 
இந்நிலையில் இதுபற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் கடிதம் கொடுத்து 9 நாட்களாகிவிட்ட நிலையில், அது குறித்த தமது முடிவை ஆளுனர் வித்யாசகர் ராவ் இன்று வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
 
மாறாக தம்மை சந்திக்க வந்த தலைவர்களிடம்,‘‘ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதாரவை திரும்பப் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேரும் இன்னும் அ.தி.மு.க.வில் தான் நீடிக்கின்றனர். அதனால் அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. இதில் ஆளுனர் தலையிட முடியாது’’ என்று கூறி இந்த விவகாரத்தில் தமது பொறுப்ப்புகளை கை கழுவி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுனரின் இவ்வாறு கூறியது உண்மை என்றால், அது மிகவும் பொறுப்பற்ற செயல். இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதிலிருந்து தவறுவதும், அதன் மூலம் ஊழலில் திளைக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு பதவியில் நீடிக்க அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கவை. ஆளுனர் இப்படி செயல்பட்டது தவறாகும்.

webdunia

 

 
ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை வலிமையுள்ள அரசு பதவியில் நீடிப்பதையும், அது பெரும்பான்மையை இழந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆணையிட்டு, அதன் முடிவுக்கு ஏற்றவாறு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதும் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள கடமை ஆகும். இதை உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகள் பல தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கின்றன. அதன்படி செயல்படுவதை தவிர்த்து, ஆதரவை திரும்பப் பெற்றவர்கள் ஆளுங்கட்சியில் நீடிப்பதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பது தேவையற்றது. அது ஓர் ஆளுனரின் வேலையும் அல்ல.
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக 19 உறுப்பினர்கள் ஆளுனரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் இருவர் அவைக்கு வெளியில் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சுமார் 75 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இத்தகைய தருணத்தில் ஆளுனர் செய்ய வேண்டியது என்ன? என்பதை அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறியிருக்கிறது. சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு ஆணையிடுவதும், பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் மாற்று வழிகளை ஆராய்வதும் தான் ஆளுனரின் பணியாகும். இதை செய்ய ஆளுனர் தயங்குவது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.
 
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி அம்மாநில ஆளுனர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். அதையேற்ற ஆளுனர் பரத்வாஜ் அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆணையிட்டார். அது தான் ஆளுனரின் பணியாகும். மாறாக, ஆதரவை திரும்பப்பெற்ற 11 பேரும் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் என்பதால், அது உட்கட்சி பிரச்சினை என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. இதுபோன்ற கடந்தகால முன்னுதாரணங்களை ஆராயாமல் நம்பிக்கை வாக்குக் கோர ஆணையிட முடியாது என்று ஆளுனர் கூறியிருப்பது, தில்லி தலைமை விருப்பப்படி பினாமி ஆட்சியை காக்க துடிக்கிறார் என்ற குற்றச்சாற்றை நிரூபித்திருக்கிறது.
 
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு துரோகம் செய்வதை விட, மிகப்பெரிய பாவம் எதுவும் இருக்க முடியாது. எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும், கடந்த கால முன்னுதாரணங்களின் அடிப்படையிலும் தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசுக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி அணிக்கு தாவும் எம்.எல்.ஏக்கள்? - அதிர்ச்சியில் தினகரன்