எதிர்வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தொண்டர்கள் இருந்தாலும் கூட்டணிக்கு மற்ற கட்சிகள் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றன. பாஜக மற்றொருபுறம் பலமான கூட்டணியாக மாற சமக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு வருகிறது.
திமுகவில் தொகுதிகள் பங்கீடு எதுவுமில்லாமல் அரசியல் ரீதியாக தார்மீக ஆதரவும் சில கட்சிகள் வழங்கியுள்ளன. திமுகவின் கூட்டணியில் மாநிலங்களவை எம்பி சீட் மட்டும் பெற்றுக் கொண்டு கமல்ஹாசன் கூட்டணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைமை மற்றும் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியின் பிரமுகர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவுகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் திமுக, அதிமுக, பாஜக என்ற மும்முனை போட்டியாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.