தனக்கு பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பான் மீது கருணை காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. துபாய்க்கு தனது மனைவியோடு சென்றிருந்த இர்பான் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்திய மருத்துவ விதிமுறைகளின்படி அது தண்டனைக்குரிய குற்றமாகும். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் மருத்துவகுழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து இர்பான் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கியது மட்டுமில்லாமல், தமிழக அரசின் மருத்துவ துறையிடம் மன்னிப்பு கேட்டார். அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ள மருத்துவ துறை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இர்பான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்பானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.