நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது.
நாடு முழுவதும் பல முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. தெருக்கள், குப்பைக் கூளங்கள், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் நாய்கள் அவ்வழியாக செல்லும் வாகனங்களை துரத்திச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவதும், சாலைகளில் செல்லும் சிறார்களை தாக்குவதுமாக இருந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் பல பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் பரவி வருவதால், அந்த நாய்கள் கடித்து பலர் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் நோய் பாதித்த நாய்கள் கருணைக் கொலை என சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஒரு முழு தீர்வு காண முடியாததாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது.
தற்போது, இதுகுறித்து தானாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முன் வந்துள்ளது. இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா “நாய்கள் குறித்து தினசரி அதிர்ச்சியான செய்திகளை பார்க்கிறோம். தெருக்களில் திரியும் நாய்களால் சிறார்கள் பாதிக்கப்படுகிறார்கள். ரேபிஸ் பரவுகிறது. இதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கப் பதிவு செய்கிறேன். தலைமை நீதிபதி இதுகுறித்து உரிய உத்தரவுகளை வழங்குவார்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K