பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ சம்மத வயதை 18-லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவ வயதினரிடையே பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் உறவுகள், தற்போதைய சட்டத்தால் வயதை காரணம் காட்டி குற்றமாக்கப்படுவதாக அவர் வாதிட்டுள்ளார்.
இந்திரா ஜெய்சிங் தனது வாதத்தில், 18 வயதுக்குட்பட்டவர்கள் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக பார்க்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். இன்றைய இளம் பருவத்தினர் காதல் மற்றும் பாலியல் உறவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவர்கள் என்றும், அவர் கூறினார்.
மேலும், டீனேஜர்களிடையே பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் பாலியல் உறவுகளை குற்றமாக்குவது தன்னிச்சையானது என்றும், அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், அவர் தெரிவித்தார். 16 முதல் 18 வயதுக்குட்பட்ட பருவ வயதினரிடையே பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு துஷ்பிரயோகம் அல்ல என்றும், அதை POCSO உள்ளிட்ட சட்டங்களில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் என்ன பதிலளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது சமூகத்திலும், சட்ட வட்டாரத்திலும் ஒரு முக்கிய விவாதத்தை தொடங்கியுள்ளது.