மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக இன்று நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளதால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஒருசில விஐபிக்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானபோதிலும் அது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது
இந்த நிலையில் மோடி பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தி அடைந்த திமுக எம்பிக்கள், இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அனைத்து எம்பிக்களுக்கும் முறையாக அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தும் திமுக எம்பிக்கள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன