கடந்த 14 ஆம் தேதி திமுக வில் இணைந்த செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்கும் மாநாடு இன்று கரூரில் நடக்கிறது.
18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே ஆட்டி வருகிறது. தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக செந்தில் பாலாஜிஅதிமுக வில் இணைவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அதிரடியாக திமுக வில் இணைந்தார்.
சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்க கரூரில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை இன்று நடத்த இருக்கிறார். இதற்கான மொத்த செலவையும் செந்தில் பாலாஜியே ஏற்றிருக்கிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.
இவ்வளவு செலவு செய்து செந்தில் பாலாஜி மாநாடு நடத்துவது, அவருக்கு வழங்கப்பட இருக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் எம்.பி. சீட்டுக்காகதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இன்று நடைபெறும் மாநாட்டில் மாவட்ட செயலாளர்பதவியும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெறும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணம் செலவானாலும் பதவி வரப்போகிற சந்தோஷத்தில் சுறுசுறுப்பாக வேலைகளைக் கவனித்து வருகிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியைத் தவிர இன்னும் இரண்டும் பேரும் மாநாடு வேலைகளில் படுபிசியாக உள்ளனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும், கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும்தான். இவர்கள் இருவரையும் மாநாட்டு வேலைகளை மேற்பார்வையிட சொல்லியிருக்கிறார் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஓடியாடி வேலைப் பார்த்துகொண்டிருக்கும் நன்னியூர் ராஜேந்திரனின் பதவியைத்தான் செந்தில் பாலாஜிக்குக் கொடுக்க இருக்கிறது திமுக.