தூத்துகுடியில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தமிழக அரசின் ஆணையின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த ஆலையின் இரண்டாவது யூனிட்டுக்கு கொடுக்கப்பட்ட நிலமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இனி நீதிமன்றம் தலையிட்டால் மட்டுமே இந்த ஆலை செயல்பட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு எதிர்க்கட்சி என்பது குற்றம் சாட்டவே இருக்கின்றது என்பதை நிரூபிப்பது போல் ஆலை மூடப்பட்டபோதிலும் மேலும் ஒருசில குற்றச்சாட்டுக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாடினால் அதையும் சட்டப்படி சந்திக்க அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் குறை சொல்லும் நோக்கம் ஒன்றையே குறியாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம் என பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் முக்கிய காரணம் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகைப்படங்களை காட்டி முதலமைச்சர் இன்று சட்டப்பேரைவையில் பேசியுள்ளார். ஆனால் இதற்கு பதில் கூற வேண்டிய திமுக எம்.எல்.ஏக்களோ வெளிநடப்பு செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.