Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

Advertiesment
Anbumani

Siva

, புதன், 12 மார்ச் 2025 (17:47 IST)
மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பது குறித்த விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை போன்ற தமிழக நலன்களுக்கு எதிரான விஷயங்களில் திமுக அரசு தொடர்ந்து நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.
 
மும்மொழிக் கொள்கை தொடர்பாக விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைக்க விருப்பம் தெரிவித்து மத்திய பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் சஞ்சய்குமாருக்கு கடந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி தமிழக அரசின் அன்றைய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
 
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இப்போது வீரமுழக்கமிடும் திமுக, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழக அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கான வாக்குமூலம் தான் இது என்பதை புரிந்து கொள்ள வல்லுனர்களின் பொழிப்புரையெல்லாம் தேவையில்லை.
 
அதுமட்டுமின்றி, அந்தக் கடிதம் மத்திய அரசுக்கு எழுதப்பட்டதன் நோக்கமே எப்படியாவது மத்திய அரசின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பது தான். அதற்காக அந்தக் கடிதத்தில், வல்லுனர் குழு பரிந்துரையைப் பெற்று 2024-25ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அதனால் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதியை எங்களுக்கு உடனே வழங்குங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட தொனியை வைத்துப் பார்த்தாலே பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு தயாராகி விட்டதை அறியமுடியும்.
 
அதுமட்டுமின்றி, தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் நாள் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமின்றி, “பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள். தமிழக மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் நாங்கள் மனமார வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தது.
 
பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதே திமுக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இப்படியாக பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு 100% தயாராகி விட்ட தமிழக அரசு, இப்போது புனிதர்களைப் போல நாடகமாடுகிறது.
 
மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடத்தையும், நாடகத்தையும் மறைத்து விட முடியாது. பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான கடிதம் இரு ஊராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு இடையே எழுதப்பட்ட கடிதம் அல்ல. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகும். அதில் உள்ள விவரங்களுக்கு திமுகவினர் அவர்கள் விருப்பம்போல பொழிப்புரை எழுத முடியாது.
 
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, இப்போதும் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அதை இல்லை என்று தமிழக அரசால் மறுக்க முடியுமா? தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதன் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையவுள்ள நிலையில், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஏன்?
 
தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் திமுக அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய நாடகங்களை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு கல்வித்துறையில் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும். பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

400 பேர் பயணித்த ரயிலை கடத்தியது எப்படி? பலுசிஸ்தான் விடுதலை படை வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!