திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (17.09.2024) நடைபெற்றது. இதனையடுத்து செம்படம்பர் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழா பொதுக் கூட்டத்திற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் பவள விழா பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள 20 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.