தேர்தல் கூட்டணி குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் வைகோவுடன் திமுக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று திமுக – மார்க். கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூகமான முடிவு ஏற்படாத நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு மார்க். கம்யூனிஸ்ட் அவசர செயற்குழு கூட்டத்தை தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் குறைந்த பட்சம் திமுக எத்தனை தொகுதிகள் வழங்கும், தங்கள் கோரிக்கை எவ்வளவு என்பது குறித்த திடமான முடிவுகளை முன்வைக்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான திமுக குழு மதிமுக பொதுசெயலாளர் வைகோவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வைகோ கோரிக்கை விடுக்கும் தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் வைகோவும் 8 தொகுதிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்போது இரு கட்சிகளையும் சமாதானம் செய்யவும், தங்கள் தொகுதி பங்கீடுக்கு ஒத்துக்கொள்ள செய்யவும் திமுக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.