குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பதை கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில் சென்னையில் பெண்கள் சிலர் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வாசகங்கள் கொண்ட கோலங்கள் போட்டது இணையத்தில் வைரலானது. இதனால் கோலம் போட்ட மாணவிகளை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு பிறகு விடுவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இன்று காலை திமுக எம்.பி கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவரது இல்லங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலங்களை போட்டனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தமிழகமெங்கும் பலர் இதுப்போன்ற கோலங்களை போட்டு வருகின்றனர்.
இந்த கோல எதிர்ப்பு ட்ரெண்டாகி வரும் வேளையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ”மூடநம்பிக்கை பேசிய நாத்திகவாதிகளை கோலம் போட வைத்து, மத கட்சி பேதமின்றி தேசீயக்கொடியை ஏந்த வைத்து,நம் இந்திய திரு நாட்டை ஒன்று படுத்திய நம் பிரதமருக்கு நன்றி சொல்வோம்.” என்று கிண்டல் செய்யும் தோனியில் கூறியுள்ளார்.
மேலும் இதை தொடர்ந்து குடியுரிமைக்கு ஆதரவு தெரிவிக்கும் பலரும் ஆதரவு வாசகங்கள் கொண்ட கோலங்களை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.