திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தந்தை பெரியாருக்கு துரோகம் இழைத்துள்ளது என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
லால்குடி தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.ஜெயசீலனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிருந்தா காரத், “தந்தை பெரியார் இந்த மண்ணிலே இருந்தார் அவரின் மிகச்சிறந்த திராவிட பராம்பரியத்திற்கும், கொள்கைகளுக்கும் துரோகம் செய்த அதிமுக, திமுகவிற்கும் முதன் முறையாக ஒரு படிப்பினையை கொடுக்கப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த இரண்டு கட்சிகளிடையே ஊழல் செய்வதில் போட்டியிருக்கிறது. யார் அதிகமாக பணம் சம்பாதித்தார்கள் என்பதில் போட்டியிருக்கிறது. எந்த குடும்பத்திற்கு அதிக சொத்து சேர்ந்திருக்கிறது என்பதில் போட்டியிருக்கிறது.
திமுக, அதிமுக தலைவர்களுக்கு எதிராக பல ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே தான் அவர்கள் வாயில் பிளாஸ்திரி போட்டுகொண்டு மோடி அரசுக்கு எதிராக பேச மறுக்கிறார்கள். மோடி அரசிற்கு எதிராக ஒருவார்த்தை பேசக்கூட அவர்களுக்கு தைரியம் கிடையாது.
எனவே தமிழகத்தின் நலன்கள் இங்கே தியாகம் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் இருக்கிறதோ அவர்கள் மோடிக்கு எதிராக போராடுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் திமுகவும் அதிமுகவும் அமைதியாக இருக்கின்றன. அவர்கள் தங்களது சுயநலத்திற்காகவே அமைதியாக இருக்கின்றனர். மக்களின் நலனுக் காக அவர்கள் பேசுவதில்லை.ஆகவே தான் இன்றைக்கு தமிழகம் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறது” என்றார்.