Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அதிமுக கொள்ளை - ஸ்டாலின் குற்றச்சாட்டு

Advertiesment
மு.க. ஸ்டாலின்
, சனி, 7 மே 2016 (10:24 IST)
அதானி நிறுவனத்துடன் இணைந்து பல கோடி கொள்ளையில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், ”கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாக்கு கேட்க கூட மக்களை சந்திக்க முடியாத நிலை இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. ஆனால் நாங்கள் தெம்போடு, திமிரோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம்.
 
அதானி குழுமம் என்பது ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்யும் மிகப்பெரிய நிறுவனம். அதனுடன் மிகப்பெரிய ஒரு ஒப்பந்தத்தை போட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ய 5436 கோடி ரூபாயில் சூரிய மின் திட்டம் நிறைவேற்ற அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் அதானி குழுமத்தின் புரோக்கர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி 20 அல்லது 25 நாட்களுக்கு தலைமைச் செயலகத்துக்கே வராத நேரத்தில் திடீரென ஒரு நாள் கோட்டைக்கு அதானி நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
 
இதில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெளி மாநிலங்களில் 5.40 ரூபாய்க்கு வாங்கும் அதே மின்சாரத்தை அதானி குழுமத்திடம் 7.01 ரூபாய்க்கு ஜெயலலிதா அரசு வாங்குவதால் தமிழக மின்சார வாரியத்திற்கு 23000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் வருகிறது என்று சொன்னால் ஜெயலலிதாவிற்கும், அமைச்சர்களுக்கும் எந்தளவுக்கு பங்கு போகிறது என்பதை இதைவிட ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது.
 
இங்கு இருக்கக் கூடிய அமைச்சர் சுந்தர்ராஜன் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மாணவியர் விடுதிக்கு சென்றார். ஒரு அமைச்சர் இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கு நேரம் காலம் கிடையாதா? அப்படி செய்த இன்ஸ்பெக்ஷன் முறையாகவாவது நடந்ததா? அங்கு நடந்ததை சொல்வதற்கு என் நா கூசுகிறது.
 
இந்த மேடைக்கு என்று ஒரு தகுதி இருக்கிறது. அதையெல்லாம் பேசி என்னுடைய தகுதியை குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் அந்த காட்சிகள் எல்லாம் வாட்ஸ் அப்பில் வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் இன்றைய அமைச்சர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
அதேபோல ஒரு எம்.பி. இருக்கிறார் இங்கு. நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பப்பட்டவர். அவருடைய நிலை என்னவென்றால், மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது எம்.பி. எங்கே என்று தேட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
 
அதனால் இப்போது அவரால் ஓட்டு கேட்டு செல்ல முடியவில்லை. வாக்காளர்கள் இவ்வளவு நாட்களாக எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்டு, அவரது கார் கண்ணாடிகளை உடைத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பிரபல ரவுடி ஓட.. ஓட வெட்டிக் கொலை