தேமுதிகவின் முப்பெரும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி, தடை செய்யப்படக்கூடிய இயக்கமாக திமுக இருப்பதாகவும், அக்கட்சி என்.ஐ.ஏ வின் அபாய பிடியில் இருக்கிறது இருப்பதாகவும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேனர் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்றும் நீண்ட நெடிய தூக்கத்திற்கு பின் தற்போதுதான் அவர் பேனர் வேண்டாம் என்று விழித்துள்ளார் என்றும் கூறிய பிரேமலதா, தேமுதிக தொடங்கப்பட்டதால் தான் திமுகவால் ஆட்சிக்கு வர இயலவில்லை என்றும் பிரேமலதா பேசினார். மேலும் தமிழகத்தில் அண்மை காலமாக கொலைகள் அதிகரித்து வருவதாகவும் இதுபோன்ற திருட்டு, வழிப்பறி குற்றங்களை தடுக்க வேலைவாய்ப்பு ஒன்றே வழி என்றும் பிரேமலதா கூறினார்.
இதே கூட்டத்தில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘உதயநிதி ஸ்டாலினையும், தம்மையும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் அவருக்கு திருமணமாகிவிட்டது, அவரது கட்சி பழையது ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார்.
இந்தி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு கண்டனம், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்கு வரவேற்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.