தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கழக பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாவட்டங்களுக்கான நிர்வாகிகளும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக எடுத்து வருகிறது.
முதல் கட்டமாக விக்கிரவாண்டி பகுதியில் மாபெரும் மாநாடு நடத்திய பின்னர் அடுத்த கட்டமாக பரந்தூர் சென்று அங்குள்ள மக்களுக்கு விஜய் குரல் கொடுத்தார். இதனை அடுத்து அவர் வேங்கைவயல் பகுதிக்கும் அவர் செல்ல இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகிகள் குறித்து அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் ஒரு புதிய சக்தியாக தமிழக வெற்றிக்கழகம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.