மன்னார்குடி மாஃபியாவின் தலைவனாக செயல்பட்ட திவாகரன்?
, புதன், 15 நவம்பர் 2017 (10:11 IST)
வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் சமீபத்தில் நடத்திய சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை கடந்த 13ம் தேதி மாலை முடிவிற்கு வந்தது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சசிகலா குடும்பத்தினர் ரூ.1430 கோடி வருமானத்திற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் ஏராளமான அசையா சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும், அந்த சொத்துக்கள் தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அதுபோக கிலோக்கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் சிக்கியுள்ளன. அவற்றை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர். அதோடு, சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 16 வங்கி லாக்கர்களை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவற்றை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். அந்த லாக்கர்களில் முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா குடும்பம் மோசடி வழியில் சேர்த்த பணம் மற்றும் சொத்துக்களை எங்கு முதலீடு செய்வது, யாருக்கு அதை பிரித்து தருவது என்ற முக்கிய முடிவுகளை சசிகலாவின் தம்பி திவாகரனே எடுத்துள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை விவேக் பொறுப்பில் ஒப்படைக்கும் முடிவையும் அவர்தான் எடுத்துள்ளார். சசிகலா குடும்பத்தின் சர்வ அதிகாரமிக்க தலைவராக அவர் செயல்பட்டுள்ளார். அவரது ஆலோசனை படியே மோசடி வழியில் சம்பாதித்த பணம் காற்றாலைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோருக்கு போலி நிறுவனங்களை கையாளும் முக்கிய பொறுப்பை திவாகரன் தந்துள்ளார். எனவேதான், விவேக் மற்றும் கிருஷ்ணப்பிரியா ஆகியோரது வீடுகளில் மற்ற இடங்களை விட கூடுதல் நாட்கள் சோதனை நடந்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே, திவாகரனிடம் தீவிர விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்