திண்டுக்கலில் தர்பார் சிறப்பு காட்சிகள் திரையிடாததால் ரசிகர்களே பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் தர்பார். ரசிகர்களால் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் இன்று வெளியானது. நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களிலேயே முழுவதும் விற்று தீர்ந்தது. உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு அருகே உள்ளே ராஜேந்திர தியேட்டரில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சி காலை 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகாலையிலேயெ வந்து தியேட்டர் முன்பு காத்திருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் திரையிடுவதில் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டர் கேட்டை உதைத்து தள்ளியதுடன், தியேட்டர் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தர்பார் பட பேனர்களை கிழிந்து, கத்தி கூச்சலிட்டு களேபரம் செய்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் ரகளையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.