டிடிவி தினகரன் திட்டமிட்டு பல காரியங்களை செய்தார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவி இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் - திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது என பகீரங்கமாக திவாகரன் பேட்டியளித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் கூறிய தினகரன் “திவாகரனின் புகார்களுக்கு பதில் கூற விருப்பமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எங்களை வெறுத்தாலும் நாங்கள் அவரை நேசிக்கிறோம்” என இறங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திவாகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், தினகரன் பல சதிகளை செய்தார் எனக் கூறினார்.
ஜெ. வின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது ராகுல் காந்தி, பிரதமர் மோடி என அனைவரும் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது, “சசிகலா என்னை சந்திக்க விரும்புகிறாரா? நான் தயராக இருக்கிறேன்” என மோடி கேட்டார். ஆனால், அது தேவையில்லை என தினகரன் கூறிவிட்டார். அதன் பின்புதான் எங்களுக்கு அது தெரியவந்தது. மேலும், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து 3 பக்கம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், மோடிக்கு சிறிய கடிதம் அனுப்பப்பட்டது. இது டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது அனைத்தும் தினகரன் திட்டமிட்டு செய்த சதி” என திவாகரன் தெரிவித்தார்.