தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த மறுதினம் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அசோக் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து தற்பொழுது வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் தினர்கன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும் தற்போதைய துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனை அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்பின்னர் டெல்லியில் அமமுகவை கட்சியாக பதிவு செய்து பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன். இதனையடுத்து தினகரன் சசிகலாவை கட்சியில் இருந்து ஓரம் கட்டிவிட்டு பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் என செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்துள்ளார் தினகரன்.
அவர் கூறியதாவது, நான் அனைத்து முடிவுகளையும் சசிகலாவை அணுகிதான் எடுத்து வருகிறேன். சசிகலாவிற்கு தெரியாமல் கட்சியில் எதுவும் நடக்கவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலா ஓரம்கட்டப்படவில்லை. அமமுகவை பதிவு செய்ய அனைவரும் விரும்பினோம். இந்த விருப்பம் சசிகலாவிற்கும் இருந்தது. இதனால் சசிகலா ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கருத கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் மே 19 ஆம் தேதி தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம்,ஒட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரி தினகரன் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டும்தான் டிடிவி தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி சுயேட்சைகளாகத்தான் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.