எடப்பாடியை முந்திய தினகரன்: அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா!
எடப்பாடியை முந்திய தினகரன்: அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா!
இந்த மாதம் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா நாள் வருவதால் அதனை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக அம்மா அணி சார்பாக கொண்டாட உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக தொடங்கிய விழாவை அந்த கட்சியினர் கொண்டாடுவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவரது அனுமதியுடன் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அணிகளாக பிரிந்துள்ளது. எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்ததும், தினகரனும், சசிகலாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து தினகரன் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வரும் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா வர இருப்பதால் இந்த விழாவை அக்டோபர் 17 முதல் 26 வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக அம்மா அணி சார்பாக கொண்டாட உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுக என கூறப்படும் எடப்பாடி, ஓபிஎஸ் இந்த விழா குறித்து அறிவிக்கும் முன்னரே தினகரன் முந்திக்கொண்டுள்ளார்.