Publish Date: Fri, 05 Jan 2018 (19:00 IST)
Updated Date: Fri, 05 Jan 2018 (19:03 IST)
தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தினகரன் தொடர்ந்து பேசி வருகிறார்.
தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
தனது பேட்டி ஒன்றில், செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஓபிஎஸ்சுக்கு அவை முன்னவர் பதவி கொடுக்கப்பட்டது செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காகத்தான். ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இணைந்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.