Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா.? செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி..!

Advertiesment
Tamilasai

Senthil Velan

, புதன், 8 மே 2024 (15:02 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா என முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன்  கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி நினைவிடத்தை பராமரிக்கிறார்கள். ஆனால் காமராஜர் நினைவிடத்தை பராமரிக்காமல் வைத்துள்ளனர் என்று கடந்த ஏப்ரல் 11, 2024-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தேன். 
 
ஏப்ரல் -11, 2024-ஆம் தேதியன்று தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அதனைத் தொடர்ந்து ‘கல்வியில் தமிழகம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்றால் அதற்குப் பெருந்தலைவர் காமராஜர் தான் காரணம். மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கியவர் காமராஜர்.
 
கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் கட்டும்பொழுது நான் பள்ளி மாணவியாக இருந்தேன். கோட்டூர்புரம் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று சென்ற போது பார்த்தேன். மண்டபத்தின் வெளியில் கரும்புச் சாறுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டு இருந்தன. இப்பொழுதும் அப்படியே காட்சியளிக்கிறது. இங்கிருந்து புல் செடிகள் அனைத்தும் காய்ந்து போய் உள்ளது.

கருணாநிதிக்குச் சமீபத்தில் கட்டப்பட்ட அவரின் நினைவிடத்தை எவ்வாறு பராமரிக்கிறார்கள். இதனை எவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். நினைவிடத்தில் பராமரிப்பதிலேயே பாரபட்சம் காட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னாள் பெருந்தலைவர்களை மதிப்பதே கிடையாது. நான் வெற்றி பெற்றால் இந்த நினைவிடத்தைச் சிறப்பாகப் பராமரிப்பேன்.
 
காமராஜரின் சரித்திரத்தை யாராலும் மறைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்காக மட்டுமே கூட்டணி வைக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட காமராஜர் மண்டபத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்லவில்லை, அவர்கள் வாரிசுகளின் கூட்டணிக்காகவே இங்கு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு கூட இங்கு வந்து மரியாதை செலுத்தி விட்டு பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்று தோன்றவில்லை.
 
காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரை மதிக்கவில்லை. அவர்களுக்கு வாரிசு அரசியல் தான் முக்கியம். மறைந்த பெருந்தலைவர்களை மதிக்கவே மாட்டார்கள் வாரிசு வாரிசு என வாரிச் சுருட்டிக் கொண்டு செல்வார்கள்’ என்று கண்டனத்தை பதிவு செய்தேன். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே காமராஜர் நினைவிடத்தை இடுகாடு போல் வைத்திருப்பதாக என்ற கேள்வி எழுப்பும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற உடனே காமராஜர் நினைவிடத்திற்கு சென்றீர்களா?
 
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த கேள்வியை கேட்டு இருக்கலாமே? காங்கிரஸ் தேசிய தலைவர்கள்சோனியா காந்தி, ராகுல் காந்தி எத்தனை முறை பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்திற்கு வந்து சென்றுள்ளார்கள்? பெருந்தலைவர் காமராஜருக்கு எதிராக கல்லூரி மாணவரை நிறுத்தி அவரை தோற்கடித்த திமுக... 1967-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய திமுகவினரோடு அறிவாலய வாசலில் காத்திருந்து சில இடங்களைப் பெற்ற உங்களுக்கு பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடம் ஞாபகம் இப்போதுதான் வந்ததா?

 
வாக்குப்பதிவு முடிந்த பிறகு காமராஜரின் ஞாபகம் வந்ததுபோல் திமுக ஆட்சியை கண்டிப்பது போல் நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயல்தானே? காமராஜர் தனது இறுதி நாட்களில் இந்திரா காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் தான் இருந்து இறந்தார் என்பதுதான் வரலாறு எனத் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருந்து அமைச்சர்களுடன் உரையாட மனு: அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி..!