தேசிய அளவில் பள்ளிகளில் தீரன் சின்னமலையின் பாடங்களை அனைத்து மொழி பாடங்களிலும் சேர்க்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:
அடுத்தடுத்து 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்; அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு வசதியாக தேசிய, மாநிலப் பாடத் திட்டங்களில் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும்.