ஏழெட்டு வருடங்களுக்கு முன் இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவத் துவங்கியது. கொசுவினால் உண்டாகும் இந்த காய்ச்சல் பல உயிர்களை பலி வாங்கியது. குறிப்பாக பல குழந்தைகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அதன்பின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரனமாக டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறைந்து போனது. கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் அவ்வளவாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்கிற தோற்றம் மக்களிடம் உண்டானது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலைதூக்க துவங்கியிருக்கிறது. சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்திருக்கிறது. இந்த வருடத்தில் தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் வரை டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. எனவே காய்ச்சல் அதிகரித்தால் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த ஒருவர் டெங்கு பாதிப்பால் மரணமடைந்தார். அந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் டெங்கு பதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல. வங்கதேசத்தில் கூட கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.