பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணித்த கிராம மக்கள்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.
சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என கடந்த மஹாசிவராத்திரி அன்று சத்குரு அவர்கள் கூறினார். அதன் ஒரு பகுதியாக, ஆதியோகி முன்பு தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் திரு.சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாக பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை திரு. ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்னாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்னாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்தி பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகுந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.