நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விதமாகப் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணடனம் தெரிவித்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றுள்ளார். அப்போது அவரிடம் மனு கொடுக்க வந்த இஸ்லாமிய மக்களிடம் ‘ நீங்கதான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டேங்குறீங்களே. போய் திமுக காரர்களிடம் உங்கள் மனுக்களைக் கொடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ள வேளையில் அவருக்குக் கணடனங்களைத் தெரிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் மாநிலச்செயலாளர் ‘கே.பாலகிருஷ்ணன் ‘அரசமைப்பு சட்டத்தின் பேரில் உறுதியெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், அனைவருக்குமாகச் செயல்பட வேண்டும். முஸ்லிம்/இந்து எனக் குடிமக்களைப் பிரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; உள்நோக்கமுடையதும் ஆகும். மேற்சொன்ன செய்தி உண்மையென்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சரவையில் தொடர தகுதி இழந்துவிட்டார். தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.