விருதுநகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	
சமீப காலமாக மக்கள் குடிக்கும் தண்ணீரில், குடிநீர் தொட்டியில் சில ஒவ்வாத பொருட்களை மர்ம நபர்கள் கலக்கும் சம்பவம் அதிர்ச்சியையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. வேங்கைவயலில் இவ்வாறாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தின் மீதான விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது.
தற்போது அப்படியான ஒரு சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது. விருதுநகர் சின்னமூப்பன்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பல மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டு சாணத்தை கலந்துள்ளனர்.
இது கண்டறியப்பட்டதும் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் சேர்த்து குடிநீர் தொட்டியிலிருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்னஞ்சிறு குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் மர்ம நபர்கள் மாட்டுச்சாணம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.