கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றபோது, ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை? என்பது உள்பட கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு, "தவெக-வினர் கேட்ட இடத்தில் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொதுச்செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன், மாற்று இடமாக வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு இடத்தை அனுமதித்தோம். ஆனால், விஜய் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வரவில்லை. அதற்கு பதிலாக மாற்று வழியில் வந்ததே இந்த நெரிசலுக்குக் காரணம்" என்று வாதிட்டது.
இதற்கு பிறகு, நீதிபதி பரத்குமார், தவெக-விற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவற்றில் சில:
திடல் போன்ற பெரிய இடத்தை பிரசாரத்திற்கு ஏன் கேட்கவில்லை? வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை இருந்தும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்? 10,000 பேர்தான் வருவார்கள் என்று என்ன அடிப்படையில் கூறினீர்கள்? கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றபோது, நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை?
இதற்கு பதிலளித்த தவெக-வின் வழக்கறிஞர், "போலீசார் முதலில் பல இடங்களில் அனுமதி மறுத்தனர். சனிக்கிழமை என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நினைத்தோம். போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டம் அதிகமாக இருந்தபோது, விஜய் பேசத் தொடங்கிய பிறகு, அவர் விரைந்து செல்லுமாறு போலீசார் கூறியும், ஆதவ் அர்ஜுனா அதைக் கேட்க மறுத்துவிட்டதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது.