சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தேனியில் சவுக்கு சங்கர் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிகிறது.
இதற்கு விளக்கம் அளித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்த நிலையில், அந்த மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இதனை அடுத்து சென்னையில் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த வழக்கு டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிடிவாரண்ட் பிறப்பித்த சில மணி நேரங்களில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.