தமிழக அரசின் கொரோனா ஒழிப்பு விருது பெற்றதை கொண்டாடும் வகையில் கூட்டம் கூட்டி விருந்து வைத்த வட்டாட்சியரை மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் பகுதியில் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் ஜெயசித்ரா. கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்ததாக சுதந்திர தினத்தன்று முதல்வரால் விருது அளிக்கப்பட்டவர்களில் ஜெயசித்ராவும் ஒருவர்.
இந்த நிலையில் விருது பெற்றதை கொண்டாடும் வகையில் தனது சக பணியாளர்களுக்கு விருந்து அழைப்பு விடுத்த ஜெயசித்ரா பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் அனைவருக்கும் கறி பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
அரசின் அனுமதி பெறாமல் அரசு கட்டிடத்தில் விருந்து நடத்தியது மற்றும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொறுப்பின்றி கூட்டம் கூட்டி விருந்து நடத்தியது ஆகிய செயல்கள் ஜெயசித்ரா மீது கடும் கண்டனங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஜெயசித்ராவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகாக விருது பெற்ற வட்டாட்சியரே கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.