ஏப்ரல் 10 மகாவீர் ஜெயந்தி மற்றும் அதனை அடுத்து தொடர் விடுமுறை தினம் வருவதை அடுத்து சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்ற அடிப்படையில் 1680 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாவீா் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை (ஏப்.10), வார விடுமுறை தினங்களான சனிக்கிழமை (ஏப்.12), ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13), மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை(ஏப்.14) ஆகிய தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, புதன்கிழமை(ஏப்.9), வெள்ளிக்கிழமை(ஏப்.11), சனிக்கிழமை(ஏப்.12) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து, பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 190 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 525 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 50 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதுபோல, மாதவரத்திலிருந்து புதன்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன..
இதுதவிர, திங்கள்கிழமை பொதுமக்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது