சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்டதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தமிழ் மகன் ஈவேரா சமீபத்தில் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்ட நிலையில் அவர் அதிமுக வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதனை அடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் எம்எல்ஏவாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியே ஏற்று கொண்டதை அடுத்து சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.