சமீபமாக வானிலை தகவல்கள் நேரத்திற்கு நேரம் முன்னுக்கு பின் மாறுபடுவது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின்போது, புயல் உருவாகிறதா? இல்லையா? கரையை கடக்குமா? கடக்காதா? என்பது குறித்து நேரத்திற்கு நேரம் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “வானிலையை முழுமையாக அறிந்து கொள்ள அறிவியல் கிடையாது. 100 சதவீதம் முழுமையாக வானிலை தகவல்களை கணிக்க முடியாது. வானிலை நிகழ்வுகள் என்பது பல்வேறு காரணிகளால் நிகழுபவை. புயலை பொறுத்தவரை, கடல் உள்ளடக்க வெப்பம், வளிமண்டல கீழடுக்கில் காற்று குவிதல், மேலடுக்கில் விரிதல், காற்றுக்கும் வளிமண்டலத்திற்கும் உள்ள தொடர்பு, மேகங்களின் தன்மை, வெப்பத்தின் அளவு, புயலின் நகர்வு வேகம் என பல காரணிகளை கொண்டு வானிலை அறியப்படுகிறது. ஆனால் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது.
வழக்கமாக நேர் திசையில் செல்லும் காற்று புயலாக மாறும்போது சுழல் காற்றாக மாறுவதால் திசை மாறும். அப்படி மாறும்போது அதன் பின்னால் சக்தி பரிமாற்றம் இருக்கிறது. இவை முழுமையாக அறியப்பட வேண்டும்.
ஃபெஞ்சல் புயலின்போது செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை ஒப்பிட்டு அது புயலாக மாற சாத்தியம் இல்லை என்று சொன்னோம். ஆனால் அது இரவில் வளர்ச்சி பெற்றதால் புயலாக அறிவிக்கப்பட்டது. எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை கணிக்க முடியாது. முழுமையாக அறிவியலாக அது அறியப்பட வேண்டும். ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தற்போது வந்துள்ளது. தொடர் முயற்சிகளும் நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K