டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்றும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என சொல்லியிருந்தேன் என்றும் குறிப்பிட்டார்.
அதனால் எங்களது பிரதிநிதி பங்கேற்றார். இதனைப் பார்த்து நான் பயந்து விட்டதாக பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றும் கோவைக்காரனுக்கு பயம் இருக்காது என்றும் சிங்கை ராமச்சந்திரன் கூறினார்.
அண்ணாமலை மட்டுமின்றி அவரது பாஸ் மோடியிடமே பேசத் தயார் என்று அவர் தெரிவித்தார். அதிமுகவை அழித்து விடுவேன், டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை, தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
3 ஆண்டுகளாக அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளார். இந்த காலத்தில் அவர் என்ன சாதித்தார்? நிறைகுடம் எப்போதும் தழும்பாது என்றும் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்றும் சிங்கை ராமச்சந்திரன் கூறினார். பாஜகவிற்கு நோட்டா உடன் தான் போட்டி நடக்கிறது என தெரிவித்த அவர், பாஜகவில் உள்ள சீனியர்களை அண்ணாமலையை மதிப்பதில்லை என்று கடுமையாக சாடினார்.
40 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தேர்தல் அறிக்கையை, ஒரு தொகுதிக்கு மட்டுமே வெளியிட்டுள்ளது என்றும் நூறு வாக்குறுதிகளை 500 நாட்களில் நிறைவேற்றுவார்களாம், 3500 நாட்களாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஏன் செய்யவில்லை? என்றும் சிங்கை ராமச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் பத்திரம் நிதியாக 6500 கோடி ரூபாய் பாஜக வாங்கியுள்ளது என்றும் ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கும், அமிஷாவுக்கும், அண்ணாமலைக்கும் தகுதி இல்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.
பாஜகவும், அண்ணாமலையையும் நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றும் அண்ணாமலைக்கு பதில் சொல்வது அதிமுக தலைவர்களின் வேலை அல்ல என்றும் சிங்கை ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.