கஜா புயலினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் தென்னை விவசாயிகள் தான். அதிலும் கடந்த பத்து வருடங்களாக கைக்காசு போட்டு செலவு செய்து இன்னும் ஒரு நயா பைசா கூட லாபம் பார்க்காமல் இருக்கும் விவசாயிகள் ஒட்டுமொத்த தென்னை மரங்களையும் இழந்து திக்கற்று உள்ளனர்.
ஒரு தென்னை மரம் காய்காய்த்து பலன் கொடுக்க சுமார் 10 முதல் 15 வருடங்கள் ஆகும். அவ்வாறு காய் காய்க்கும் நேரத்தில் கஜா புயல் லட்சக்கணக்கான தென்னைகளை சாய்த்துவிட்டு சென்றதால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை இழந்து டெல்டா பகுதி தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழகன்குடிகாடு என்ற கிராமத்தில் தென்னை விவசாயி சுந்தர்ராஜ் என்பவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கரில் தென்னந்தோப்பை வளர்த்து வந்தார். கஜா புயலால் அவர் வளர்த்து வந்த அனைத்து மரங்களும் வேறோடு சாய்ந்துவிட்டதால் மனவருத்தத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதேபோன்ற நிலையில்தான் பல தென்னை விவசாயிகள் இருந்துவரும் நிலையில் இன்னொரு உயிர் பலியாகுவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.