ஒரு தென்னை மரத்துக்கு 1,100 ரூபாய் இழப்பீடு வழங்கலாம் என்று கணக்கிட்டு தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்த புத்திசாலி யார்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.600 மற்றும் அதை வெட்டி அகற்ற ரூ.500 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதுகுறித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு தென்னை மரத்துக்கு 1,100 ரூபாய் வழங்கலாம் என்று கணக்கிட்ட புத்திசாலி யார்? லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன. ஒவ்வொரு மரமும் 30 முதல் 40 ஆண்டுகள் வயதானது. குறைந்தபட்சம் 10 ஆயிரமாவது தந்தாக வேண்டும். புதிதாக மரம் வைத்தால் அது பலன் தர 8 ஆண்டுகள் ஆகும். மரத்துக்கு நிவாரணமாக 600 ரூபாயும் அதை வெட்டி அகற்ற 500 ரூபாயும் கணக்கிட்டவருக்கு விவசாயிகளின் வேதனை தெரியுமா? 'நானும் விவசாயி தான்' என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு தென்னையின் அருமை தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுளார்.
மேலும் மக்களிடம் நேரில் குறைகேட்பது தான் குறைகேட்புப் பயணமாக இருக்க முடியும். ஹெலிகாப்டரில் செல்வது கண் துடைப்பு பயணம் மட்டுமே. இதற்கு முதல்வர் வராமலேயே இருந்திருக்கலாம் என்பது தான் மக்களின் எண்ணம்.புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாமலேயே நிவாரணப் பணிகளுக்கு 1,000 கோடி என்று அறிவித்துள்ளார் முதல்வர் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல்லாயிரம் கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வெறும் ஆயிரம் கோடியை வைத்து நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவும் அடிப்படை வசதிகளும் தான் செய்து தர முடியும் என்றும் முகாம்களில் உள்ளவர்கள் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வார்கள்? என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.